சென்னையில் அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
|சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
சென்னை,
திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், அயோத்திதாசப் பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவின் நினைவாக ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டப திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அயோத்திதாசப் பண்டிதர், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகங்களை கண்டு வெகுண்டெழுந்து சமூக சீர்திருத்த பாதையில் தனது பயணத்தை தொடங்கி சாதி ஒழிப்பையும், சமூக விடுதலையையும் தனது லட்சியமாக கொண்டிருந்தார். பெரியார், அயோத்திதாசப் பண்டிதரை பற்றி குறிப்பிடும்போது, "என் பகுத்தறிவுப் பிரசாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.