கிருஷ்ணகிரி
தளி அருகே பீன்ஸ் தோட்டத்தில் புகுந்து 3 யானைகள் அட்டகாசம்
|தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உனிசேநத்தம் வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதில் 3 யானைகள் பிரிந்து நேற்று காலை கரேனபாளையம் கிராமம் சங்கரப்பா (55) என்பவருடைய விளை நிலத்தில் புகுந்தன. இதையடுத்து 7 ஏக்கரில் பயிர் செய்துள்ள பீன்ஸ், பட்டாணி பயிர்களை 3 யானைகளும் கால்களால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின. இதை பார்த்த விவசாயிகள் பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் விரட்டினர்.
இதனை தொடர்ந்து சங்கரப்பா என்பவருடைய ரோஜா தோட்டத்தில் புகுந்த 3 யானைகளும் பின்னர் உனிசேநத்தம் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
இதுகுறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் யானைகளால் சேதமடைந்த பீன்ஸ், பட்டாணி பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.