திண்டுக்கல்
திண்டுக்கல் பொன்னகரத்தில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
|திண்டுக்கல் பொன்னகரத்தில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மின் சிக்கன வாரம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் கோட்ட மின்சாரத்துறை சார்பில், கடந்த 14-ந் தேதி முதல் மின்சிக்கன வாரம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஊர்வலமும் நடத்தப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் நடந்தது. செயற்பொறியாளர் சாந்தி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மின்சார சிக்கனம் தொடர்பான பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். பொன்னகரம் துணை மின்நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் வாைழக்காய்பட்டி வழியாக சென்று நல்லாம்பட்டியில் நிறைவடைந்தது.
பின்னர் அப்பகுதி மக்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மேலும் வீடுகளில் உள்ள மின்சாதனங்களை பாதுகாப்புடன் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மின்சாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.