திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|திண்டுக்கல்லில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 23-ந்தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் விசாகன் கலந்துகொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து சுயஉதவிக்குழு பெண்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பஸ்நிலையம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட முக்கிய வழியாக சென்றது. இதில் பங்கேற்ற பெண்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி நடந்து சென்றனர். இதில், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், சமூக நலத்துறை அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர் பூங்கொடி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வினோதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.