சென்னை
தொழிலக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி
|தொழிலக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி சென்னை கிண்டி சுகாதார இயக்குநர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் சென்னை மண்டலத்தில் இயங்கி வரும் செங்கல் சூளை, அரிசி ஆலை மற்றும் கட்டுமான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் நிறைமதி வரவேற்றார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் விழிப்புணர்வு பயிற்சியை தொடங்கி வைத்தார். தொழிற்சாலைகள் சட்டம், குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளருக்கான சட்டம் குறித்து இணை இயக்குனர் கார்த்திகேயன் பேசினார்.
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் குறித்து உதவி ஆணையர் ஜெயலட்சுமியும், ஆள்கடத்தல் தடுப்பு சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் குறித்து மண்டல நன்னடத்தை அலுவலர் சரவணக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் எடுத்துக்கூறினர்.
வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து இணை இயக்குனர் ஜெயக்குமார் பேசினார். பயிற்சி முகாமில் 120 தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை மண்டல கூடுதல் இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் இணை, துணை, உதவி இயக்குனர்கள் பங்கேற்றனர்.