< Back
மாநில செய்திகள்
குமரியில் 21 இடங்களில் இருந்து விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் 21 இடங்களில் இருந்து விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்

தினத்தந்தி
|
27 Jun 2022 2:15 AM IST

குமரியில் போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி 21 இடங்களில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் புறப்பட்டது. இந்த ஜோதி ஓட்டம் நாகர்கோவிலில் நிறைவடைந்தது.

நாகர்கோவில்,

குமரியில் போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி 21 இடங்களில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் புறப்பட்டது. இந்த ஜோதி ஓட்டம் நாகர்கோவிலில் நிறைவடைந்தது.

ஜோதி ஓட்டம்

சர்வதேச போதைபொருள் தடுப்பு தினத்தையொட்டி, குமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாவட்டத்திற்குட்பட்ட 21 இடங்களில் இருந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை நடத்தின. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், செயல் அலுவலர் ஜீவநாதன், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், தம்பிதங்கம் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல களியக்காவிளை பஸ் நிலையம், மேல்பாலை சந்திப்பு, மார்த்தாண்டம் போலீஸ் நிலையம், குலசேகரம் பஸ் நிலையம், இனயம் பஸ் நிலையம், கருங்கல் பஸ் நிலையம், ஆலஞ்சி பஸ் நிலையம், அருமனை சந்திப்பு, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், முட்டம் கலங்கரை விளக்கம், வில்லுக்குறி சந்திப்பு, ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம், சுங்கான்கடை சந்திப்பு, பள்ளம், எட்டாமடை பஸ் நிலையம், அஞ்சுகிராமம் பஸ் நிலையம், தென்தாமரைகுளம் பஸ் நிலையம், ஆரல்வாய்மொழி பஸ் நிலையம், கார்மல் போதை நோய் நலப்பணி மையம், ராமன்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தன.

கலெக்டர்

அங்கு விழிப்புணர்வு ஜோதி ஓட்ட நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார், தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு போதை எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். பின்னர் போதையில் இருந்து மீண்டவர்களை பெருமைப்படுத்தும் விதமாக வெள்ளை புறாக்களை பறக்கவிட்டனர்.

இதில் கலெக்டர் அரவிந்த் பேசும்போது கூறியதாவது:-

போதை இல்லாத இந்தியா திட்டத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் குமரி மாவட்டமும் ஒன்று. இதுதொடர்பான விழிப்புணர்வு குமரி மாவட்டத்தில் அதிக அளவில் ஏற்படுத்தப்படுகிறது. ஜோதியை ஏந்தி வந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களை பாராட்டுகிறேன். "மாணவரே வேண்டாமே போதை" என்ற கருத்தை மையமாக கொண்டு இந்த ஆண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக இளம்வயதினர் போதைக்கு அடிமையாவது மிகவும் வேதனை அளிக்கிறது. இத்தகைய தீய பழக்கத்தை அடியோடு மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

போதை பொருள் இல்லா மாவட்டம்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை முழுமையாக கண்காணித்து, நல்ல அறிவுரைகள் வழங்க வேண்டும். போதைப்பொருள் இல்லா குமரி மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) அவ்வை மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) ஷீலா ஜாண், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்