அரியலூர்
வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு; ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
|வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வுக்கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், எண்ணெய் நிறுவனங்கள், செல்போன் கோபுரம் சேவை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகள், சிமெண்டு நிறுவனங்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பழுதான மற்றும் பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடங்களின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காதவாறு அடைப்புகளை சரி செய்ய, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ கழிவுகள்
மேலும், மருத்துவ நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதையும், அவசர நிலையை சமாளிக்க ஏதுவாக ஆக்சிஜன் வினியோகம் கிடைப்பதையும் உறுதி செய்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பைகள் தேங்காமல் அகற்றவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வெண்டும்.
அனைத்து தீயணைப்பு உபகரணங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 29 பகுதிகளில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மீட்பு பணிகள் செய்திடவும் குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மையம்
பேரிடர் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04329228709 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, 9384056231 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.