திருவண்ணாமலை
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம்
|பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்டரங்கில் இமைகள் என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல், பெண் குழந்தைகள் கல்வியை தடையின்றி தொடருதல், குழந்தை திருமணத்தை ஒழித்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், நீதிமன்ற பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வழக்கு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டீபன், சவுந்தரராஜன், பழனி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலையங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.