< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
26 Jun 2023 7:18 PM IST

திருப்பத்தூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வாணியம்பாடி சாலை வழியாக சென்று தூய நெஞ்சக் கல்லூரியில் முடிவடைந்தது.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 1,700 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பேசுகையில், மாணவர்கள்தான் நாளைய சமுதாயம். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்களிடம் கூட போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை மாணவர்கள் தவிர்த்து படிப்பு மற்றும் விளையாட்டில் தங்களது ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் நல்லமுறையில் படித்து சமுதாயத்தில் முன் உதாரணமாக திகழ வேண்டும். போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்..

கல்லூரி மற்றும் பள்ளி பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி ஆய்வாளர் தன்ராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி, துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடல்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறையின் சார்பில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் ரேணுகாதேவி, உதவி திட்ட அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்