விழுப்புரம்
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
|தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று அரசு போக்குவரத்துக்கழகமும், அரசு சட்டக்கல்லூரியும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை நடத்தியது.
இப்பேரணியை அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ராஜ்மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொது மேலாளர் அர்ஜூணன், முதுநிலை துணை மேலாளர் சிங்காரவேலன், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் சவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள், கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் வரை சென்று மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கல்லூரி வளாகத்திற்கு வந்தடைந்தனர்.
பேரணியின்போது, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விளம்பர பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.