< Back
மாநில செய்திகள்
போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
17 Nov 2022 6:58 PM GMT

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மோகனூர்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாதையை மாற்றும் போதை எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் கீழ், கல்லூரி பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா காலகட்டத்தில் தனிமை சூழலில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் நிலை சிலருக்கு ஏற்பட்டது. இந்தநிலையை மாற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்தை போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் அனைத்து துறைகளும் சேர்ந்து காவல்துறை பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் விண்ணைத்தொடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 177 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருட்களால் புற்றுநோய் உருவாதல் உள்ளிட்ட தீங்குகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதிலிருந்து மீள்வது அந்த எண்ணம் உருவாகாமல் தடுத்தல் குறித்தும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

12 கடைகளுக்கு சீல்

இந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய மாற்றங்கள் தான் இன்றைய தினம் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடைபெறுகின்றது. விண்ணைத்தொடு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 86 மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்திய நிலையில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு அந்த பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு சாதாரண மாணவர்களாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். மேலும், பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அரசினால் தடை செய்யப்பட்ட போதை உண்டாக்கும் பாக்குகளை விற்ற 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பேசும் போது:-

நல்ல பாதுகாப்பான சமுதாயம் உருவாக நம் அனைவருக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பாதிப்பானது அவர்களுக்கு மட்டுமானது என்றில்லாமல் அவரை சுற்றியுள்ள நமக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து போதைப்பொருட்களை ஒழிக்க உறுதி ஏற்க வேண்டும்.

காவல்துறை போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து அவர்களது சொத்துகளை பயன்படுத்த இயலாமல் செய்துள்ளது. விழிப்புணர்வு மூலமாக காவல்துறைக்கு தொலைபேசி அழைப்புகள் வரப்பெற்று வருகின்றன. அதன்பேரில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

விழிப்புணர்வு சுவரொட்டி

முன்னதாக, பாதையை மாற்றும் போதை எனும் கல்லூரி பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாமில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டு, பேராசிரியர்களுக்கான பயிற்சி கையேட்டினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் குமரவேல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி, அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாவரவியல் உதவி பேராசிரியர் வெஸ்லி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்