< Back
மாநில செய்திகள்
ஆட்சிமொழி சட்ட வாரத்தையொட்டி நாளை விழிப்புணர்வு ஊர்வலம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆட்சிமொழி சட்ட வாரத்தையொட்டி நாளை விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
20 Feb 2023 12:00 AM IST

ஆட்சிமொழி சட்ட வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நாளை நடக்கிறது.

தமிழ் ஆட்சிமொழி சட்டம் கடந்த 1956-ம் ஆண்டில் இயற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை அறிவிப்பில் 7 நாட்கள் ஆட்சிமொழி சட்ட வாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. நாளை உலக தாய்மொழி நாளன்று விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சங்குபேட்டை சென்று, கடைவீதி வழியாக மீண்டும் அரசு பள்ளியில் வந்து ஊர்வலம் முடிவடைகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 24-ந்தேதி வரை 3 நாட்களும் முறையே அரசு பணியாளர்களுக்கான கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும், மொழி பயிற்சி, மொழி பெயர்ப்பும், கலை சொல்லாக்கம் மற்றும் தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. 25-ந்தேதி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட, அதன் உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளை கொண்டு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், வணிக நிறுவன உரிமையாளர்கள், சிறு, குறு வணிக நிறுவன அமைப்பும் மற்றும் தொழிலாளர் நலத்துறையினை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். 27-ந்தேதி ஆட்சிமொழி சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றம் நடக்கிறது. ஆட்சிமொழி சட்ட வாரத்தின் இறுதி நாளான 28-ந்தேதி பொதுமக்கள் ஆட்சிமொழி சட்டத்தை அறியும் வகையில் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் ஏந்தி அரசு பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது, என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்