கரூர்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
|உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினமானது ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலத்தினை கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலமானது கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட கல்லூரி, மாணவ, மாணவிகள் தாய் சேய் நலத்தை பாதுகாக்க வேண்டும். பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவிக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
பெண் சிசுக்கொலையை தடுக்க வேண்டும். இளம் வயது திருமணத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். முன்னதாக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.