பெரம்பலூர்
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
|உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயர்கண்ணி வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும், செவிலியர் கல்லூரி மாணவிகளும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர், இதனைத்தொடர்ந்து இதற்கான பிரசார வாகனத்தையும், கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தையும் மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளவரசன், குடும்ப நலதுணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் செந்தில்குமார், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன், மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள், தனலட்சுமி சீனிவாசன் குழுமம், தந்தை ரோவர் குழுமம் மற்றும் கிறிஸ்டியன் குழுமத்தை சேர்ந்த செவிலியர் கல்லூரிகளில் பயிற்சி பெறும் செவிலிய மாணவிகள் கலந்து கொண்டனர்.