சென்னை
கோவில் உழவாரப்பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
|கோவில் உழவாரப்பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வடபழனியில் நடந்தது.
அம்பத்தூரில் உள்ள இந்து கோவில்கள் சுத்தம் செய்யும் இரவை மன்றம் சார்பில் 250-வது உழவாரப்பணி விழிப்புணர்வு வடபழனி முருகன் கோவிலில் நேற்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக கோவில்களின் தூய்மை நலன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. திருக்கையிலாய வாத்தியங்கள் முழங்க பன்னீர் திருமுறை சுமந்து விழிப்புணர்வு பதாகை ஏந்தி பிரசுரங்கள் வழங்கி வடபழனி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் இருந்து துரைசாமி ரோடு வழியாக வேங்கீசுவரர் கோவில் ராஜகோபுரம் வழியாக முக்கிய சாலைகளை கடந்து முருகன் கோவில் ராஜபுரம் சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்று நடும் பணியும், பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி பக்தர்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியை நீதிபதி ஜோதிமணி நந்திக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மணிலால் கலந்து கொண்டார்.
பின்னர் வடபழனி முருகன் கோவில் தெப்பக்குளம் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் வேங்கீசுவரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர். மாலையில் 250-வது உழவாரபணியை முன்னிட்டு கோவில் சார்ந்த 25 குருக்கள், 25 ஓதுவார்கள், 25 பூஜை நடைபெறாத கோவில்களுக்கு பூஜை பொருள் வழங்கப்பட்டது. கோசாலை பணியாளர்கள், நந்தவன பராமரிப்பாளர்கள், கோவில் காவலாளிகள் என்று 15 குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சேவை திட்டங்களின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். 250-வது உழவாரப்பள்ளி மலர் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஸ்ரீமத் சத்யானந்தம் மகாராஜ் சுவாமிகள் ஆசி வழங்கினார். நீதிபதி எஸ்.பாஸ்கரன் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார்.