< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
25 Sept 2023 1:15 AM IST

பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடியும், மரம் வளர்ப்போம், மண் வளத்தை காப்போம் என்று கோஷமிட்டபடியும் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் திண்டுக்கல் உதவி வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாசன், தன்னார்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதன் பின்னர் கலெக்டர் பூங்கொடி நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பசுமை பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளில் 23.69 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிப்பதற்காக தான் பசுமை தமிழ்நாடு இயக்கம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி இன்று மட்டும் (அதாவது நேற்று) திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

மேலும் செய்திகள்