பெரம்பலூர்
மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
|மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பெரம்பலூரை அடுத்த மேலப்புலியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை ஜெசிந்தா தலைமையில் நடைபெற்றது. ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மேலும் 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு மேல்நிலைப்பள்ளியின் சேர்க்கைக்காக செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் மாணவ-மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஊராட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.