திருவள்ளூர்
'ஊர் கூடி ஊரணி காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு 'லோகோ' - கலெக்டர் வெளியிட்டார்
|மாவட்டம் முழுவதும் 75 நீர்நிலைகளை சுத்தம் செய்வது தொடர்பாக ‘ஊர் கூடி ஊரணி காப்போம்’ இயக்கம் குறித்து விழிப்புணர்வு லோகோவை கலெக்டர் வெளியிட்டார்.
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசு, பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்புடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மேம்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுவதையொட்டி, ஊர் கூடி ஊரணி காப்போம் என்ற இயக்கத்தின் சார்பாக 75 நீர்நிலைகளை சுத்தம் செய்வது குறித்தும், இந்த தூய்மை பணியில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் மற்றும் இணையதள இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லோகோ வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி லோகோவை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை யொட்டியும் அரசு, பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்புடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஊர்கூடி ஊரணி காப்போம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் தொடக்கமாக ஊர் கூடி ஊரணி காப்போம் என்ற லோகோ வெளியிடப்படுகிறது. உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி, பல தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தன்னார்வலர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் 75 நீர்நிலைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும். இந்த சீரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் 044-29896043 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை தெரிவிக்க லாம் என அவர் தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.