தர்மபுரி
சட்ட பணிகள் ஆணை குழு சார்பில்சமரச தீர்வு மைய விழிப்புணர்வு ஊர்வலம்
|சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சமரச தீர்வு மைய விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் சட்ட பணிகள் ஆணை குழு ஆகியவற்றின் சார்பில் சமரச தீர்வு மைய விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கியது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் உள்ளன. அந்த வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும். சமரச தீர்வு காணக்கூடிய வழக்குகளை சமரசம் செய்து தீர்வு கண்டால் பாதி வழக்குகள் குறைந்து விடும். சமரச தீர்வு மையம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணும் போது கால விரயத்தை குறைக்க முடியும்.
வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்கான சட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பது குறித்து பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமரச தீர்வு மையம் பற்றி விவரங்களை பொதுமக்களிடையே கொண்டு போய் சேர்க்க இளைஞர்களால் தான்முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பதாகைகள்
அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய ஊர்வலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு, சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, நீதிபதி விஜயகுமாரி, முதன்மை சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி சிவகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், கூடுதல் மகளிர் நீதிபதி மதுவர்ஷினி, ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பிரபு, தர்மபுரி வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகர், சமரச தீர்வு மைய வக்கீல்கள் ராஜேந்திரன், பாலு, அருள்ஜோதி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், திட்ட அலுவலர் தீர்த்தகிரி, உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.