< Back
மாநில செய்திகள்
தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
8 March 2023 12:15 AM IST

நாமக்கல்லில் நேற்று தமிழ் ஆட்சிமொழி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடங்கி வைத்தார்.

ஆட்சிமொழி சட்ட வாரவிழா

தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆட்சிமொழி சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அதன்படி நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், தமிழில் வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளையும், மொழிப்பயிற்சி, மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் குறித்து பயிற்சி வகுப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைத்தல் தொடர்பான கூட்டம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆட்சிமொழிச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு பட்டிமன்றம் ஆகியன நடைபெற்றன.

விழிப்புணர்வு ஊர்வலம்

அதனைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டுவில்லைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். பின்னர் ஆட்சிமொழி சட்ட வார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜோதி, அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்