கிருஷ்ணகிரி
விசாராயம், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
|கிருஷ்ணகிரியில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பழையபேட்டை, காந்தி சிலை வழியாக பழைய பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு இசைப்பள்ளி மூலம் ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-
கைது நடவடிக்கை
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் கண் பார்வை பாதிக்கப்படும். நினைவாற்றல் பாதிக்கப்படும். நரம்பு தளர்ச்சி ஏற்படும். உடல் உறுப்புகள் செயலிழக்க செய்யும். சமூகத்தில் மதிப்பு குறையும். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தை ஏற்படுத்தும். இது போன்ற தீமைகளில் இருந்து விடுபட போதைப்பொருளை ஒழிப்போம் என்று சூளுரைத்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
அதேபோல், போதைப்பொருட்களை கடத்தவோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உண்டாக்குவதோ, உபயோகப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் குறித்த புகார்களை 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையர் குமரேசன், சேலம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, கோட்ட ஆய அலுவலர்கள் தண்டபாணி, மகேந்திரன், தர்மன், முனிராஜ், தாசில்தார் சம்பத்குமார், துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.