திண்டுக்கல்
விழிப்புணர்வு ஊர்வலம்
|பழனி, வத்தலக்குண்டு பகுதிகளில் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பழனியில் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பழனி செயற்பொறியாளர் ஓம் பிரகாஷ் தொடங்கி வைத்தார். மின்சார சிக்கனத்தை வலியுறுத்தியும், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி, பஸ் நிலையம், தாராபுரம் சாலை, நால்ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் மின்வாரிய அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் வத்தலக்குண்டுவில் தேசிய மின் சிக்கன வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு வத்தலக்குண்டு மின்பகிர்மான கழக கோட்ட பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள், மின்வாரிய ஊழியர்கள் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கொண்டு சென்றனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஊர்வலம் வத்தலக்குண்டு மஞ்சளாற்று பாலம் பகுதியில் இருந்து தொடங்கி பஸ்நிலையம், மெயின்ரோடு வழியாக வந்து காளியம்மன்கோவில் அருகே முடிவடைந்தது.