தர்மபுரி
ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
|ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்து தர்மபுரியில் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட நல்வாழ்வுத்துறையின் மாவட்ட குடும்ப நலச்செயலகத்தின் சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி- குடும்பநல நிரந்தர கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் மற்றும் ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி விழிப்புணர்வு ரதம் மற்றும் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது, 'இந்த விழிப்புணர்வு ரத ஊர்வலம் நிறைவு பெற்ற பிறகு அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு அரசு தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100 வழங்குகிறது' என்றார்.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன், அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி, காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார், தொழுநோய்) துணை இயக்குனர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் சீனிவாசன், தமிழ்வாணன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.