அரியலூர்
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான்
|பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது/
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்(நெகிழி) பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும், அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலவலக வளாகத்தில் இருந்து ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட மாரத்தானை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பையும் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் மாரத்தான் ஓட்டம் நிறைவடைந்தது.இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த உட்கோட்டையை சேர்ந்த ஹரிதாசுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரனுக்கு ரூ.3 ஆயிரமும், ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரி மாணவர் வல்லரசுக்கு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் வழங்கினார். இதேபோல் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை-அறிவியல் கல்லூரி மாணவி ஜெயராணிக்கு ரூ.5 ஆயிரமும், அரியலூர் அரசு நகர் மெட்ரிக் பள்ளி மாணவி ரித்திகாஸ்ரீக்கு ரூ.3 ஆயிரமும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி மோனிகாஸ்ரீக்கு ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.500 பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.