திண்டுக்கல்
பாலியல் குற்றங்களை தடுக்க கிராமங்களில் விழிப்புணர்வு
|திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக 14 முதல் 17 வயது வரையுள்ள சிறுமிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதோடு, கோர்ட்டில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் போலீசார் கவனமுடன் செயல்பட வேண்டும். அதோடு பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பள்ளிகளில் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புற சிறுமிகள், பாலியல் வன்முறையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே கிராமங்களில் பஸ் நிறுத்தம், சந்தை, 100 நாட்கள் வேலை செய்யும் இடம், மகளிர் சுயஉதவிக்குழு கூட்டம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால் உடனே பெற்றோர் அல்லது ஆசிரியைகளிடம் தெரிவிக்கும்படி குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.