சென்னை
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
|உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் நேற்று நடத்தியது.
பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (சி.டி.ஏ.) தென் மாநிலங்களில் இருந்து ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் டி.ஆர்.டி.ஓ. பிரிவுகளுக்கு தேவையான பணங்களை செலுத்துதல், கணக்கியல், தணிக்கை மற்றும் நிதி ஆலோசனைகள் வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதுதவிர தென் மாநிலங்களில் வசிக்கும் பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் வழங்குகிறது. இந்த அலுவலகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கரியமில வாயு குறைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நேற்று நடத்தியது.
சென்னை நந்தம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டை வரை நடந்த இந்த பேரணியில் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதுகுறித்து டி.ஜெயசீலன் கூறும்போது, 'அலுவலகத்துக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது சைக்கிளை எடுத்து செல்ல வேண்டும். இதன் மூலம் நிலையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியமும் மேம்படும்' என்றார்.