ராணிப்பேட்டை
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
|பனப்பாக்கத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை பிரசாரம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான வடிவேலு கலந்து கொண்டு பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு கூறுகையில், பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த காரணமாக இருந்துள்ளது. மாணவர்களுக்கு முதல் வகுப்பிலிருந்தே எளிமையான ஆங்கில பயிற்சியும், கணினி, ஸ்மார்ட் போன் ஆப் மூலம் கற்றல் கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. எனவே பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நடப்பு கல்வியாண்டில் இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்சவேணி, ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.