< Back
மாநில செய்திகள்
தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
27 May 2023 12:15 AM IST

நாமக்கல்லில் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.

விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் விதத்தில் "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை கொண்டு ஆரம்பிக்கப்படும் தனிநபர் நிறுவனம், பங்குதாரர் நிறுவனம், எல்.எல்.பி. நிறுவனம் மற்றும் (பி) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

தொழில் முன்னோடிகள் திட்டம்

அதற்கு விண்ணப்பம் செய்பவர் குறைந்தபட்சம் 18 வயது முடிந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை.

ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மீன்பண்ணை, பன்றி பண்ணை, இறால் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வசதி பெறலாம். அதோடு விவசாயத்திற்கு தேவையான கருவிகளை இந்த திட்டத்தின் மூலம் வாங்கி வாடகைக்கு பயன்படுத்தலாம்.

ரூ.1½ கோடி

மேலும் குளிர் பதனக்கிடங்கு, சேமிப்புக் கிடங்கு, கல்யாண மண்டபம், தங்கும் விடுதி, பெட்ரோல் பங்க், கியாஸ் ஏஜென்சி ஆகியவற்றை அமைப்பதற்கும் இதன் மூலம் கடன் வசதி பெற முடியும். அதேபோல் ஆட்டோ, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, வாடகை கார், லாரி, பஸ் உள்பட பல்வேறு வாகனங்களை மானியத்துடன் வாங்கி பயனடையலாம். திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம், அதிகபட்சமாக ரூ.1½ கோடி மானியம் வழங்கப்படும். மேலும் 6 சதவீத பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படும். எனவே விருப்பம் உள்ளவர்கள் https://msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் உமா கூறினார்.

இந்த முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் இளங்கோ, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர்கள் சக்கரவர்த்தி (டி.ஐ.சி.சி.ஐ), சுரேஷ் (சீட்ஸ்), மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்