திண்டுக்கல்
விழிப்புணர்வு முகாம்
|வேடசந்தூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் கோவிலூர் அரசு துணை சுகாதார நிலையத்தின் சார்பில், செல்லகுட்டியூர் கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி நடராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்மகேஸ்வரி கலந்து கொண்டு குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தீமைகள், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் குழந்தைகள் மீதான குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது 1098 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்கரை, சுகாதார ஆய்வாளர்கள் போரப்பன், சவடமுத்து, சுல்தான், செவிலியர்கள் மகேஸ்வரி, மீனா, ராமமூர்த்தி, கிராம ஊராட்சி செயலர் கனகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.