பெரம்பலூர்
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு
|போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள எம்.ஜி.ஆர். நகர் மற்றும் எளம்பலூர் கிராமத்தில் போக்சோ சட்டம், பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் மற்றும் தற்கொலைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தற்கொலை முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒரு செயல். மேலும் எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்றும், போக்சோ சட்டம் குறித்தும், போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், குழந்தை திருமணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துக்கூறினார். மேலும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி, அதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தங்களது குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும், என்றார். இதில் ெபாதுமக்கள் கலந்து கொண்டனர்.