நாமக்கல்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரோலர் ஸ்கேட்டிங் மூலம் வீரர்கள் விழிப்புணர்வு
|44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரோலர் ஸ்கேட்டிங் மூலம் வீரர்கள் விழிப்புணர்வு
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியை பொதுமக்கள் இடையே தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 80-க்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெற்ற விழிப்புணர்வு சக்கர சறுக்கு ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு சக்கர சறுக்கு ஓட்டத்தில் கலந்து கொண்ட வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் செஸ் படம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்பட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் சக்கர சறுக்கு (ரோலர் ஸ்கேட்டிங்) அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.