நீலகிரி
முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|ஒரு வருடமாக நடந்த ஊட்டி-200 விழா நிறைவு பெற்றது. இதில் அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டனர். முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஊட்டி
ஒரு வருடமாக நடந்த ஊட்டி-200 விழா நிறைவு பெற்றது. இதில் அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டனர். முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிறைவு விழா
நீலகிரி மாவட்டம் ஊட்டியை ஆங்கிலேயர் ஜான் சல்லிவன் கண்டறிந்தார். தொடர்ந்து அவர் ஊட்டி ஏரியை உருவாக்கி, ஊட்டி நகரை கட்டமைத்தார். ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில், ஊட்டி-200 விழா கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா மற்றும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்ற பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு 61 அலுவலர்களுக்கும், ஊட்டி-200 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதாக 27 பேர், 2 நன்கொடையாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் ஜான் சல்லிவனின் ஊட்டி-200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள், குறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
பயிற்சி
இதையடுத்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியதாவது:-
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் ஜான் சல்லிவனின் வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் நீலகிரி மாவட்ட வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி எம்.பி.ராசா பேசுகையில், நீலகிரி மாவட்டம் உலக புகழ்பெற்று இருக்கிறது என்றால், அதனை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவனையே சாரும். ஊட்டி-200 விழாவையொட்டி ஓராண்டு காலத்தில் தமிழர் பண்பாடு, மலைவாழ் மக்களின் பண்பாடு, கலாசாரம் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மத, இன வேறுபாடுகளை தாண்டி நீலகிரி மாவட்டம் அமைதியாக இருக்கிறது என்றார்.
ஜான் சல்லிவன் சிலைக்கு மரியாதை
முன்னதாக ஜான் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இந்திரா, முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. தேவாரம், நீலகிரி ஆவண காப்பக தலைவர் வேனுகோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.