< Back
மாநில செய்திகள்
வேளாண்மையில் சிறப்பாக ஈடுபடும் விவசாயிகளுக்கு பரிசு; உழவன் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்
மாநில செய்திகள்

வேளாண்மையில் சிறப்பாக ஈடுபடும் விவசாயிகளுக்கு பரிசு; உழவன் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
28 Sep 2022 4:35 PM GMT

வேளாண்மையில் சிறப்பாக ஈடுபடும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி பரிசளிக்கும் என்றும் கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

சென்னை:

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தை 2021-22-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி ரூ.6 லட்சம் நிதியும் ஒப்பளிக்கப்பட்டது.

நடப்பாண்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி, மேற்கண்ட 3 இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி பரிசளிக்கும் என்றும் கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட 3 இனங்களில் தகுதியான விவசாயிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில் வேளாண்மைத்துறை இயக்குனர், தோட்டக்கலைத்துறை இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலும், தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகத் தங்களது பெயர்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திட வேண்டும்.

குத்தகை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக ரூ.100-ஐ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி படிவத்துடன் இணைத்திட வேண்டும்.

பதிவு செய்தபின், உங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அல்லது வேளாண்மைப் பொறியியல் உதவி என்ஜினீயரையோ அல்லது வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை துணை இயக்குனரையோ தொடர்பு கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறாத விவசாயிகள், தங்களது உள்ளூர் புதிய வேளாண் தொழில்நுட்பம் அல்லது புதிய எந்திரம் ஆகியவற்றை மேம்படுத்தி நடப்பு ஆண்டிலும் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மேலும் செய்திகள்