செங்கல்பட்டு
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
|மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதியன்று தமிழக முதல்-அமைச்சரால் ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிக்காக சிறப்பாக சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் அளிக்கப்பட உள்ளது.
எனவே இந்த விருதுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஜி.எஸ்.டி.சாலை, கோர்ட்டு அருகில், செங்கல்பட்டு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ்களை இணைத்து 2 நகல்களை வருகிற 28-ந் தேதி மாலை 5.30 மணிக்குள்; மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்:044-27431853ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.