சிவகங்கை
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
|லட்சிய இலக்கு வட்டார திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஒன்றியத்தில் லட்சிய இலக்கு வட்டார திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து துறையை சேர்ந்த மகளிருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாரத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை திட்டம் சார்ந்த தினசரி நிகழ்ச்சிகள் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண் துறை மற்றும் மகளிர் திட்டம் உள்ளிட்ட துறையினரால் நடத்தப்பட்டது.
நிறைவு நிகழ்ச்சியில் மேற்கண்ட துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு பரிசளிப்பு விழா திருப்பத்தூரில் நடந்தது. திட்ட இயக்குனர் சிவராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி உதவி இயக்குனர் குமார், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பிரகாசம் வரவேற்றார். விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் பர்ணபாஸ் அந்தோணி, வட்டார கல்வி அலுவலர் குமார், தாரணி, செந்தில்நாதன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியை உதவியாளர் மாணிக்கராஜ் தொகுத்து வழங்கினார். இதில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.