< Back
மாநில செய்திகள்
அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: அதுவரை போராட்ட முடிவு தொடரும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
மாநில செய்திகள்

அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: அதுவரை போராட்ட முடிவு தொடரும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

தினத்தந்தி
|
5 Jan 2024 6:12 PM IST

போக்குவரத்து தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவாத்தை மேற்கொண்டார்.

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. மேலும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவாத்தை மேற்கொண்டார். இதில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தை முடிந்து பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் நாளை மறுநாள் மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம், அதுவரை போராட்ட முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது,

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அமைச்சரின் முடிவை பொறுத்து சங்கத்தினர் கலந்து பேசி முடிவெடுப்போம். அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். நல்ல முடிவு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்ட முடிவு தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்