< Back
மாநில செய்திகள்
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு
மாநில செய்திகள்

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
24 April 2024 12:57 PM IST

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கூடலூர்,

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழித் தீவனங்கள், முட்டை போன்றவற்றை கொண்டுவரும் வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கூடலூரை அடுத்துள்ள துரைப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள கோழி மற்றும் வாத்து பண்ணையில் கால்நடை பராமரிப்பு மாவட்ட இணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமையிலான தனிப்படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பண்ணையில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் அந்த பகுதியில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பண்ணையில் வளர்க்கப்படும் கோழி மற்றும் வாத்துகளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் போது கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்