< Back
மாநில செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தினத்தந்தி
|
9 Jan 2024 10:44 AM GMT

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தையும் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மதுரை,

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்துகின்றனர். அனைவருக்கும் சம வாய்ப்பளிக்க அனைத்து சமூகத்தையும் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. அதுபோலவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியையும் நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு வந்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி, அவனியாபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் கிராமத்து கமிட்டியினர் என யாரும் இல்லை. குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதி மற்றும் இயக்கங்களின் பெயரை கூறி ஜல்லிக்கட்டு நடத்த இருக்கும் கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பாக நாளை மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும். இதற்காக அனைத்து தரப்பு மனுதாரர்களை முறையாக நோட்டீஸ் அனுப்பி அழைக்க வேண்டும். மேலும் நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ள அமைதிப் பேச்சுவார்த்தை முழுவதையும் வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்