திருநெல்வேலி
ஆவணி மூல திருவிழா: கருவூர் சித்தருக்கு சுவாமி ஜோதி மயமாக நாளை காட்சி கொடுக்கிறார்
|ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு, மானூரில் கருவூர் சித்தருக்கு சுவாமி ஜோதி மயமாக நாளை (திங்கட்கிழமை) காட்சி கொடுக்கிறார்
மானூர்:
ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு, மானூரில் கருவூர் சித்தருக்கு சுவாமி ஜோதி மயமாக நாளை (திங்கட்கிழமை) காட்சி கொடுக்கிறார்.
ஆவணி மூல திருவிழா
கருவூர் சித்தர் தவப்பயனால் சித்திகள் பெற்று, எந்த கோவில் சென்று இறைவனை அழைத்து வணங்கினாலும் காட்சி கிடைக்கும் என பெயர் பெற்றார். அவ்வாறு நெல்லையப்பர் கோவிலில் சுவாமி நெல்லையப்பரை அழைத்தபோது இறைவன் பதில் அளிக்காததால், 'இங்கு ஈசன் இல்லை, எனவே எருக்கும் குறுக்கும் எழுக' என கூறி, மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை அடைந்தார். இதையடுத்து நெல்லை நகரம் பொலிவிழந்து கோவிலில் எருக்கும் குறுக்கும் எழுந்தது.
எனவே சித்தரை சாந்தப்படுத்த எண்ணிய இறைவன் தற்போது தொண்டர் நயினார் கோவில் இருக்குமிடம் வந்து சித்தரை அழைத்தார். சித்தர் யார்? என்று கேட்க, சிவபக்தர் வடிவில் வந்த இறைவன் 'தான் தொண்டருக்கு எல்லாம் தொண்டன்' என்று பணிந்தார். சித்தர் அவரிடம், நெல்லையப்பரை மானூர் வந்து தனக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் பெறச்சொல் எனக்கூறி மானூர் வந்தடைகிறார். இதுவே தற்போது ஆவணி மூலத்திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நெல்லையப்பர் கோவில், மானூர் அம்பலவாண சுவாமி கோவில் ஆகியவற்றில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஜோதிமயமாக காட்சி
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நேற்று இரவு கருவூர் சித்தர் நெல்லை ரதவீதிகளில் உலா வந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை வந்தடைகிறார்.
10-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும், சந்திரசேகரராகவும், பவானி அம்பாளாகவும் உருமாறி, பாண்டியராஜன், சண்டிகேஸ்வரர், தாமிரபரணி அம்மன், அகத்திய முனிவர், குங்கிலிய நாயனார் ஆகிய ஐவருடன் நெல்லையில் வீதி உலா வந்து, நாளை (திங்கட்கிழமை) காலையில் மானூர் வந்தடைந்து கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாக காட்சி கொடுக்க இருக்கிறார்கள். தொடர்ந்து மானூர் ஆவணி மூல மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மானூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.