தூத்துக்குடி
ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
|கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு பயணியர் விடுதி முன்பு நேற்று ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். போலீஸ் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுவதற்கான செயலியை உருவாக்கி, ஆட்டோ தொழிலில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் முத்தரப்புக்குழு அமைத்திட வேண்டும், மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் வட்டாரச் செயலாளர் அய்யப்பன், வட்டார தலைவர் முனியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நிர்வாக குழு உறுப்பினர் சேது ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.