< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
16 May 2023 6:22 AM IST

திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு மலை அடிவாரம் நுழைவுப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.10, ஆட்டோவிற்கு ரூ.30, காருக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மலை அடிவார பகுதியில் இருந்து மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல திருக்கோவில் நிர்வாகம் வசூலிக்கும் 30 ரூபாய் நுழைவு கட்டணத் தொகையை வசூலிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என முருகன் கோவில் நிர்வாகத்திடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று 150-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மலைப்பாதை நுழைவுப் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களிடம் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து ஆட்டோ டிரைவர்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக மலைக்கோவில் அடிவாரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்