திருச்சி
ஆட்டோ டிரைவர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை
|ஆட்டோ டிரைவர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
சமயபுரம்:
வாக்குவாதம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன்கள் அரிராஜன் (வயது 42), அசோக்குமார் (40), சரவணன் (38). அசோக்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். ஆட்டோ டிரைவரான அரிராஜன் திருமணமாகி குடும்பத்துடன் திருச்சி குட்ஷெட் ரோட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி புரவி நகருக்கு சென்ற அரிராஜன், தனது பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சரவணன், ஏன் அடிக்கடி வந்து பெற்றோரிடம் பணம் கேட்கிறாய் என்று அரிராஜனை கண்டித்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொலை
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சரவணன், அரிராஜனை பீர் பாட்டிலால் வயிறு மற்றும் தோள்பட்டையில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அரிராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அரிராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.