< Back
மாநில செய்திகள்
காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
20 Aug 2022 2:58 PM IST

காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக மற்றொரு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55). ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வந்தார். அந்த பூனைக்குட்டியை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவர் வளர்த்து வந்த நாய் கடித்து குதறியது.

இதில் பூனைக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் மன வேதனையில் இருந்த மனோகரன் தினமும் மது குடித்துவிட்டு வந்து பூனையை கடித்த நாயை வளர்த்து வரும் ஆட்டோ டிரைவர் சங்கரை தரக்குறைவாக பேசி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இதேபோல மனோகரன் மது குடித்துவிட்டு வந்து தரக்குறைவாக பேசிக்கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் சங்கர் வீச்சரிவாளால் மனோகரனை சரமாரியாக கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த மனோகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மனோகரன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மனோகரனை வெட்டிய மற்றொரு ஆட்டோ டிரைவரான சங்கர் (37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்