திருவள்ளூர்
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவருக்கு வெட்டு - வாலிபர் கைது
|திருவள்ளூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 31). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் வேப்பம்பட்டு பகுதிக்கு கட்டிட வேலைக்காக ஆட்களை ஆட்டோவில் கொண்டு விட்டு விட்டு அந்த பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்துவதற்காக சென்றார்.
அப்போது அங்கு மது அருந்தி கொண்டு இருந்த வேப்பம்பட்டு அய்யன் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் (26) என்பவர் போதையில் வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த தகராறில் மோகனசுந்தரம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கடேசனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினார். வலியால் அலறி துடித்த வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரத்தை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தார்.