நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை
|நெல்லை அருகே ஆட்டோவை வழிமறித்து டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர்
நெல்லை அருகே உள்ள மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை (வயது 65), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலையில் சவாரிக்காக நெல்லைக்கு வந்து விட்டு, மீண்டும் அவர் மட்டும் ஊருக்கு திரும்பிச் சென்றார். கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, திடீரென 5 பேர் கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரிடம் தகராறு செய்தனர்.
வெட்டிக்கொலை
பின்னர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் விஜயகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா?, அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
நெல்லை அருகே ஆட்டோவை வழிமறித்து டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.