தேனி
ஆட்டோ- கார் மோதல்; தொழிலாளி பலி
|ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் திருமலாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஓட்டினார். தேனி-மதுரை நெடுஞ்சாலையில் திருமலாபுரம் விலக்கில் ஆட்டோ வந்தது.
அப்போது சாலையை கடந்தபோது எதிரே வந்த கார், எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். டிரைவர் பிரேம்குமார் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த பிரேம்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சென்னை பொன்னேரி பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.