< Back
மாநில செய்திகள்
மலைகிராமங்களில் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்
தர்மபுரி
மாநில செய்திகள்

மலைகிராமங்களில் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்

தினத்தந்தி
|
8 July 2022 10:34 PM IST

ஏரியூர் பகுதியில் மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வின் போது கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

ஏரியூர்

ஏரியூர் பகுதியில் மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வின் போது கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் அஜ்ஜனஅள்ளி ஊராட்சி சிகரலஅள்ளி மலைக்கிராமத்திற்கு கலெக்டர் சாந்தி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார், அங்குள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

எண்ணற்ற திட்டங்கள்

இருளர் இன மக்களின் மேம்பாட்டிற்காக இருப்பிடம், குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளை மேம்படுத்தவும், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இருளர் இன மக்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். கல்வியில் முன்னேற்றமடைந்தால் அவர்கள் வாழ்க்கை தரத்திலும், பொருளாதாரத்திலும் மேன்மை அடைய முடியும் என்பதால்தான் இருளர் இன மக்களுக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

இப்பகுதியில் பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதன் மூலம் உங்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

எனவே அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வையுங்கள். இங்குள்ள படித்த குழந்தைகளும், உயர்க்கல்வி முடித்த குழந்தைகளும் தொடர்ந்து பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டு வந்தால் நிச்சயம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார். பின்னர் அஜ்ஜன அள்ளி, வீரப்பன் கொட்டாய் பகுதி் இருளர் இன மக்களுக்கு இ பட்டா வழங்க பென்னாகரம் தாசில்தாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் அஜ்ஜனஅள்ளி, வீரப்பன் கொட்டாய் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ரேஷன்கடைகள் மூலம் தடையின்றி பொருட்கள் வழங்கவும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது தாசில்தார் அசோக்குமார், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்