மிமிக்ரி பண்ணிட்டாங்க...! பேசுனது அவருதான் ஆதாரம் இருக்கு...! அ.தி.மு.க.வில் புயலை கிளப்பும் பொன்னையனின் ஆடியோ
|எடப்பாடி பழனிசாமி தரப்பை அசைத்து பார்க்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்
சென்னை
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்நடந்தது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் இதனால் கட்சி அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்கள் புடை சூழ சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், அப்போது சென்ற ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரமாக காட்சியளித்தது. அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கும் பூட்டு போடப்பட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோலப்பனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 9 நிமிட ஆடியோவில்,
'தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகின்றனர்.
தங்கமணி மு.க ஸ்டாலினை டெவலப் பண்ண ஆரம்பித்துவிட்டார். தங்கமணி அவரைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல் கே.பி முனுசாமி ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். பணத்தை பாதுகாப்பதற்காக இப்படி ஆடுகிறார்கள். கே.பி முனுசாமி துரைமுருகனை பிடித்து பெட்ரோல் பங்கினை வாங்கிவிட்டார். இதனால் மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் தடுமாறுகிறார்கள். கே.பி முனுசாமி ஒரு நக்சலைட்டாக இருந்தார். டி.ஜி.பி தேவாரம் கே.பி.முனுசாமி நக்சலைட் உடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என ஜெயலலிதாவிடம் புகார் அளித்ததும் ஜெயலலிதா கே.பி முனுசாமியை ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதாவிற்கு முன்பு எம்.ஜி.ஆ.ரும் கே.பி முனுசாமி ஒதுக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் 100 கோடி, 200 கோடி ரூபாய் வைத்துள்ளனர்.
எடப்பாடி பின்னால் சென்றால் தான் சம்பாதித்ததை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தளவாய் சுந்தரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புரோக்கர். முதலில் ஒற்றை தலைமை பிரச்சனையை பேசியது தளவாய் சுந்தரம் தான். பொதுக்குழு கூட்டத்தில் சி.வி சண்முகம் நாய் கத்துவதுபோல் கத்துகிறார். அதனால்தான் விவகாரம் நீதிமன்றம் சென்றது. எடப்பாடி ஓ.பன்னீர் செல்வம் உடன் சமாதானமாக பேச தயாராக இருந்தார்.
ஆனால் அவருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை. எடப்பாடி முதுகிலேயே எம்.எல்.ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்.எல்.ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர்.
கே.பி முனுசாமி ஒற்றைத்தலைமைக்கு வர முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுவிட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்' என்று கூறுவதாக் அது உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பை அசைத்து பார்க்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆடியோ குறித்து கருத்து தெரிவித்து உள்ள பொன்னையன் அ.தி.மு.க. நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் உள்பட யாரிடமும் நான் பேசவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. வெளியான ஆடியோ போலியானது. எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது.
தி.மு.க. இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்ற அளவுக்கு எடப்பாடி பழனிசாமி புகழ் உயர்ந்துள்ளது. எடப்பாடி ஒரு அறிவு பெட்டகம், வழி நடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் என்று பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து நாஞ்சில் கோலப்பன் கூறும் போது எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குறித்து என்னிடம் பேசியது பொன்னையன் தான் என கூறி உள்ளார்.