< Back
மாநில செய்திகள்
ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
4 July 2023 12:39 AM IST

ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆடி திருவாதிரை விழா

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவினை, அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த ஆண்டு முதல் ஆடி திருவாதிரை விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அதன் அடிப்படையில் ஆடி திருவாதிரை விழாவினை அரியலூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, ஆடி திருவாதிரை விழாவின்போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை செய்தார். விழாவின்போது பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுலபமாக விழாவிற்கு வந்து செல்லும் வகையில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு பஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

கூட்ட நெரிசல் இன்றி...

கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டிய விரிவான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்