திண்டுக்கல்
சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட முயற்சி
|சாணார்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில், பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூட்டை உடைத்து திருட முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில், நத்தம் மெயின்ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பணி முடிந்து, அலுவலகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழியர்களிடம் விசாரணை
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட பதிவாளர் சின்னராஜ், மாவட்ட தணிக்கை பதிவாளர் தில்லைக்கரசி ஆகியோர் அலுவலகத்துக்கு வந்து ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து எந்தவித ஆவணங்களும் திருடப்படவில்லை என்றும், கணினி உள்ளிட்ட எந்தவித பொருட்களையும் மர்ம நபர் எடுத்து செல்லவில்ைல என்றும் தெரியவந்துள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதற்கிடையே சார்பதிவாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பரபரப்பான காட்சி பதிவாகி இருந்தது.
அதாவது நள்ளிரவு 2 மணி அளவில் வேட்டி, சட்டை அணிந்த 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வருகிறார். அரிவாள் போன்ற ஒரு ஆயுதத்தை கையில் வைத்து பூட்டை உடைத்து அவர் அலுவலகத்துக்குள் நுழைகிறார்.
அலுவலக அறையில் இருந்த இரும்பு பெட்டியை திறக்கிறார். பின்னர் முதல் தளத்துக்கு சென்ற அவர், அங்கிருந்த ஆவணங்கள் அடங்கிய அறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைகிறார். அங்கேயும் ஏதாவது இருக்கிறதா? என்று அவர் தேடி பார்க்கிறார்.
ஆனால் அலுவலகத்தில் பணம் எதுவும் இல்லாததால் சம்பந்தப்பட்ட நபர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
மற்றொரு சம்பவம்
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
இதேபோல் பத்திரப்பதிவு அலுவலகத்தின் அருகே உள்ள பத்திர எழுத்தர் முத்துச்சாமி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய இவ்விரு சம்பவங்கள் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.